வானவில் : ஹூண்டாய் கோனா பேட்டரி எஸ்.யு.வி. அறிமுகம்
ஹூண்டாய் நிறுவனம் பேட்டரியில் ஓடக்கூடிய எஸ்.யு.வி. மாடல் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ‘கோனா’ என்ற பெயரில் வந்துள்ள இந்த காரின் விலை ரூ.25.30 லட்சமாகும்.
ஹவாய் தீவின் மேற்கு கடற்கரை பிராந்தியத்தின் ஒரு பகுதியின் பெயர் கோனா. இப்பிராந்தியத்தில்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் சாகச பிரியர்கள் அதிகம் உருவாகின்றனர். இதைக் கருத்தில் கொண்ட இந்நிறுவனம் தனது காருக்கு கோனா என்று பெயர் சூட்டியுள்ளது.
இந்தக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. அனைத்துக்கும் மேலாக ஸ்டார்ட் செய்து 9.7 விநாடிகளில் இதில் 100 கி.மீ. வேகத்தை எட்டும். இதில் 39.2 கிலோவாட் பேட்டரி உள்ளது.
தற்போது இந்தியாவில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் இ20 பிளஸ், இவெரிடோ மாடல் மற்றும் டாடா இ டிகோர் ஆகிய மாடல்கள் மட்டுமே பேட்டரி கார்களாக உள்ளன. அதிலும் டாடா டிகோர் தற்போது பயண ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே தயாரித்து அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பொது மக்களுக்கு விற்பனைக்கு வரவில்லை.
ஆனால் ஹூண்டாய் கோனா மாடலானது எஸ்.யு.வி. காராக வந்துள்ளது. இந்த காரின் பேட்டரி சக்தியில் 80 சதவீதம் சார்ஜ் ஆக 57 நிமிடம் போதுமானது. முன்புற கிரில் பகுதியிலேயே சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. பேட்டரி கார் விற்பனையை அதிகரிக்க சார்ஜிங் மையங்களை அமைக்கும் முயற்சியிலும் ஹூண்டாய் நிறுவனம் இறங்கியுள்ளது.
இதற்காக பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இந் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஐ.ஓ.சி. பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த காருக்கு 3 ஆண்டு உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அளிக்கிறது. அத்துடன் இதில் உள்ள லித்தியம் பேட்டரிக்கு 8 ஆண்டு உத்தரவாதத்தையும் நிறுவனம் அளிக்கிறது. அதாவது 1.60 லட்சம் கி.மீ. தூரம் வரை பேட்டரிக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தமட்டில் இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. இது தவிர எலெக்ட்ரானிக்ஸ் டெபிலிடி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிலிடி கண்ட்ரோல், ஹில்அசிஸ்ட் கண்ட்ரோல், ஐசோபிக்ஸ், வர்ச்சுவல் என்ஜின் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இதில் உள்ளன. ஒருவேளை இந்த காரில் டிரைவர் மட்டுமே பயணிக்க நேர்ந்தால் டிரைவர் ஒன்லி ஏ.சி. என்ற வசதியும், அதாவது ஒரு நபருக்கான குளிர் காற்று வசதி உள்ளது.
மேலும் இதில் நான்கு விதமான ஓட்டுனர் தேர்வு நிலைகள் உள்ளது. கடந்த ஆண்டு ஜெனீவா சர்வதேச கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இந்த மாடல் ஏற்கனவே பிற நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்தியாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது.
Related Tags :
Next Story