வானவில் : ஓரியண்டின் ‘ஐ லவ்’ எல்.இ.டி. பல்புகள்
சிகே பிர்லா குழுமத்தின் அங்கமான ஓரியண்ட் எலெக்ட்ரிக்கல் நிறுவனம் கண்களை பாதுகாக்கும் வகையிலான எல்.இ.டி. பல்புகளை அறிமுகம் செய்துள்ளது.
கண்களை பாதுகாப்பதால் இதற்கு ஐ லவ் ( EyeLuv ) என பெயர் சூட்டியுள்ளது இந்நிறுவனம். இந்த பல்பில் பிளிக்கர் கண்ட்ரோல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. அதாவது பல்புகள் மின்னும். இத்தகைய மின்னும் (சிமிட்டல்) தன்மையானது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். கண்ணுக்குப் புலப்படாத அதேசமயம் கண்களை பாதிக்கும் வகையிலான மின்னும் தன்மை இந்த பல்பில் கிடையாது. பொதுவாக எல்.இ.டி. விளக்குகளில் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தும், பல அம்சங்கள் உள்ளன. ஆனால் இந்த பல்பில் அவை அனைத்தும் கிடையாது. இதனால் நாள் முழுவதும் உற்சாகமாக பணியாற்றலாம். சிமிட்டும் தன்மையானது 100 ஹெர்ட்ஸுக்கு குறைவாக இருந்தால் அது சிமிட்டும்போது அது கண்களுக்குப் புலப்படும். 100 ஹெர்ட்ஸுக்கு அதிகமாக இருக்கும்போது பல்பு பிளிக்கர் ஆவது தெரியாது. பல்புகள் சிமிட்டுவதை செல்போனில் உள்ள கேமரா மூலம் வீடியோவாக எடுத்துப் பார்த்தால் சிமிட்டல் நன்கு புலப்படும். இந்த சிமிட்டலானது சிலசமயம் ஒளி வரி கீற்றாகவும், சில சமயம் வலுவான சிமிட்டலாகவும் இருக்கும். பேட்டன் மற்றும் லுமினெஸ் என இரண்டு வகைகளில் வந்துள்ளது.
இதில் பேட்டன் மாடலானது வீடுகளில் பயன்படுத்தப்படும் டியூப் லைட்டாகும். ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து இந்த பல்பை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பல்புகள் 85 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கும் தன்மை கொண்டவை. இவற்றுக்கு இரண்டு ஆண்டு உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அளிக்கிறது. தற்போது சந்தையில் விற்பனையாகும் எல்.இ.டி. விளக்குகளில் சிமிட்டும் அளவு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உள்ளன.
இவற்றில் கண்ணுக்கு புலப்படும் சிமிட்டலால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, பார்வை குறைபாடு உள்ளிட்டவை ஏற்படும். இவற்றை இப்புதிய பல்புகளை வாங்கி உபயோகிப்பதன் மூலம் தவிர்க்க முடியும். இந்த பல்புகளுக்கு இந்திய மருத்துவ அகாடமி முன்கூட்டியே நோய் தடுப்புக்கான சான்றிதழை வழங்கியுள்ளது. மின்சார சிக்கனம் மட்டுமின்றி உடல் நலனிலும் அக்கறை காட்டும் வகையில் இந்த பல்பை தயாரித்துள்ளது ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம்.
Related Tags :
Next Story