வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சொத்து மதிப்பு ரூ.58¾ கோடி
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் சொத்துமதிப்பு ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 என அவருடைய வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவரது பெயரிலும், அவரது மனைவி சங்கீதா, மகள்கள் கே.செந்தாமரை, கே.இலக்கியா, மகன் கே.இளவரசன் ஆகியோரது பெயர்களிலும் மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டி.எம்.கதிர்ஆனந்த் பெயரில் ரூ.14 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 870 மதிப்பிலும், அவரது மனைவி சங்கீதா பெயரில் ரூ.2 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 618 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ.31 லட்சத்து 96 ஆயிரத்து 684 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.
இதில் டி.எம்.கதிர்ஆனந்த் பெயரில் கையிருப்பாக ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 16, அவரது மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879 உள்ளது. கதிர்ஆனந்த் பெயரில் ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 437 மதிப்பிலான நகைகளும், அவரது மனைவி பெயரில் ரூ.27 லட்சத்து 18 ஆயிரத்து 637 மதிப்புள்ள நகைகளும், மற்றவை வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு, காப்பீட்டு முதலீடாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கதிர்ஆனந்த் பெயரில் ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 மதிப்பிலும், அவரது மனைவி சங்கீதா பெயரில் ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்பிலும் நிலங்கள் உள்பட அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறி உள்ளார்.
மேலும் கதிர்ஆனந்தின் மனைவி பெயரில் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story