ஆடிமாத பிறப்பையொட்டி நாமக்கல்லில் தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகள் உற்சாகம்
ஆடிமாத பிறப்பை யொட்டி நேற்று நாமக்கல்லில் சிறுவர், சிறுமிகள் தேங்காய் சுட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நாமக்கல்,
ஆடிமாத பிறப்பை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி, பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மாலை பொதுமக்களும், சிறுவர், சிறுமிகளும், புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு, இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
இதையொட்டி இளம் தேங்காயில் அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி, தேங்காயின் ஒருகண்ணில் அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் வாட்டி தேங்காயை சுட்டனர்.
இவ்வாறு சுடப்பட்ட தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காய் உடன் தீயில் சுட்ட பொருட்களை அக்கம், பக்கத்தில் உள்ள வர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் உண்டும் கொண்டாடினர். நாமக்கல் நகரில் நேற்று தேங்காய் சுடும் பண்டிகை ஆங்காங்கே தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் ஆடிமாத பிறப்பை யொட்டி நேற்று மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சாமி மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story