கோவில்பட்டியில் 143 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


கோவில்பட்டியில் 143 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 143 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு, பொதுமக்கள் 304 கோரிக்கை மனுக்களை வழங்கினர். அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் 29 பேருக்கு திருமண உதவித்தொகை, 2 பேருக்கு கல்வி உதவித்தொகை, 21 பேருக்கு இயற்கை மரண நிவாரணத்தொகை, 3 பேருக்கு விபத்து நிவாரணத்தொகை, 27 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை, 61 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மொத்தம் 143 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 65 ஆயிரத்து 747 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

முகாமில் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில், இளையரசனேந்தல், அய்யனேரி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு, கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி கருப்பு பேண்ட், சட்டை அணிந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவ படத்தை கையில் ஏந்தி வந்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் தூக்கிலிட வேண்டும். நளினிக்கு பரோல் வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முகாமில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மல்லிகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தலைமை எழுத்தர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாயானது, முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ், ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் மாரியப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story