26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவுக்கு 1000 போலீசார் பாதுகாப்பு


26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவுக்கு 1000 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 July 2019 4:00 AM IST (Updated: 18 July 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவுக்கு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதுடன், 60 கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

இது குறித்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. திருவிழா பாதுகாப்பு பணியில் சுமார் 1000 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி தூத்துக்குடி நகரின் வடக்கு பகுதியில் இருந்து வருபவர்கள் கார்களை நிறுத்துவதற்கு முத்துநகர் கடற்கரையிலும், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பழைய துறைமுக சாலையோர பகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தெர்மல்நகர், முத்தையாபுரம் பகுதியில் இருந்து வருபவர்கள் மீன்பிடி துறைமுக வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். நகரின் உள் பகுதியில் இருந்து வருபவர்கள் இருசக்கர வாகனங்களை பழைய தீயணைப்பு நிலையம், லசால் பள்ளி வளாகத்திலும், கார்களை காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நிறுத்த வேண்டும்.

ஆலயத்தை சுற்றி நகரில் 4 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கு குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி பெற்றோர்களை தவறவிட்ட குழந்தைகளின் பெற்றோரை எளிதில் கண்டறியும் வகையில் புதிய முயற்சியாக ஆலயத்துக்கு வரும் அனைத்து குழந்தைகளின் கைகளிலும் பெற்றோர் விவரம், தொலைபேசி எண் அடங்கிய பேண்ட் போலீஸ் மூலம் அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பெண்கள் நகைகளை பாதுகாப்பாக வைக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி லும் ஊக்குகள் வழங்கப்படுகிறது.

மேலும் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரமும், பொருட்காட்சி திடலில் 10 கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்படுகிறது. ஆங்காங்கே உயரமான கட்டிடங்களில் இருந்து போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்ள உள்ளனர். பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் மொத்தம் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கேமராக்கள் பொருத்தப்பட்ட கார்களை முக்கிய பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இயக்கி குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மோட்டார் சைக்கிள் மூலம் போலீசார் தொடர்ந்து ரோந்து வந்து கண்காணிக்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் 20 இடங்களில் தகவல் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. அதில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை, குறைகளை எழுதி போடலாம். அதன் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் மூலம் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன்(வடபாகம்), ஜெயப்பிரகாஷ்(மத்தியபாகம்), சிசில்(போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story