சோழம்பேட்டை பகுதியில் விபத்தை தவிர்க்க சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சோழம்பேட்டை பகுதியில் விபத்தை தவிர்க்க சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 7:00 PM GMT)

சோழம்பேட்டை பகுதியில் விபத்தை தவிர்க்க சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே பூம்புகார்-கல்லணை சாலை சீரமைக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை நகரில் இருந்து குத்தாலம்-அஞ்சாறுவார்த்தலை வரை 10 கி.மீட்டர் தூரம் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பூம்புகாரில் இருந்து திருவையாறு வரை 5 நவக்கிரக தலங்களும், திருமணஞ்சேரி, சுவாமிமலை உள்ளிட்ட புண்ணிய தலங்களும் அமைந்துள்ளன.

இதனால் இந்த சாலையில் தினமும் இருசக்கர வாகனங்கள், கார், வேன், பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் சாலையோரத்தில் ஒரு சிறிய வடிகால் வாய்க்கால் உள்ளது. சாலை அகலப்படுத்தப்பட்டதால் அந்த வடிகால் வாய்க்கால் சுருங்கி ஓடைபோல ஆகிவிட்டது.

தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து

அதுவும் அந்த வடிகால் ஓரத்தில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் வாய்க்காலையொட்டி தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கனரக வாகனங்களுக்கு வழிவிடும்போது, வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு ஒரு கார் அந்த வாய்க்காலில் இறங்கியதால் விபத்து ஏற்பட்டது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில் பூம்புகார்-கல்லணை சாலையில் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை பகுதியில் வாய்க்காலையொட்டி சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்கப் படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story