முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் நகைகள் அபேஸ் மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காரிமங்கலம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி சி.மோட்டூரை சேர்ந்தவர் ராணி (வயது 60). இவர் நேற்று முன் தினம் உடல்நிலை சரியில்லை என்று காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். அங்கு சிகிச்சை முடிந்்து மளிகை பொருட்கள் வாங்க காரிமங்கலம் சாவடி அருகே வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் ராணியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.அப்போது ராணி தன் குடும்ப பிரச்சினை குறித்து அந்த மர்ம ஆசாமியிடம் பரிதாபமாக கூறியுள்ளார். வாழ்க்கை நடத்த தனக்கு எந்த சொந்தமும் உதவுவதில்லை என்று அழுகையோடு கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த மர்ம ஆசாமி தனக்கு காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில்் தெரிந்தவர்கள் உள்ளனர், தான் நினைத்தால் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய ராணி அந்த ஆசாமி கேட்டுக்கொண்டபடி செல்போனில் படம் எடுக்க ஒப்புக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அப்போது ராணி காதில் அணிந்திருந்த தங்கத்தோடு மற்றும் நகைகளோடு படம் எடுத்தால் அதிகாரிகள் உங்களை வசதி படைத்தவர் என்று கூறி முதியோர் உதவித்தொகை கொடுக்க மாட்டார்கள் என்று மூதாட்டியிடம் மர்ம ஆசாமி கூறியுள்ளார்.
இதை நம்பிய ராணி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி அந்த ஆசாமியிடம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட ஆசாமி தனது பையில் இருந்து எதையோ எடுத்து அந்த மூதாட்டியின் தலையில் தடவியதை தொடர்ந்து ராணி மயக்கம் அடைந்தார்.
சிறிது நேரத்திற்கு பின்னர்் மயக்கம் தெளிந்த மூதாட்டி ராணி நூதனமான முறையில் தன்னிடம் நகைகளை அபேஸ் செய்த அந்த மர்ம ஆசாமி குறித்த விவரத்தை அங்கிருந்த பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரிமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story