அரவேனு-அளக்கரை சாலையில் குட்டியை முதுகில் சுமந்து உலா வந்த கரடி - வாகன ஓட்டிகள் பீதி


அரவேனு-அளக்கரை சாலையில் குட்டியை முதுகில் சுமந்து உலா வந்த கரடி - வாகன ஓட்டிகள் பீதி
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 7:54 PM GMT)

அரவேனு-அளக்கரை சாலையில் குட்டியை முதுகில் சுமந்து கரடி உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்தும், வனப்பகுதியை ஒட்டியும் விதிமுறைகளை மீறி ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் வனவிலங்குகளின் வாழ்விடம் குறைந்து வருவதுடன், அவற்றின் வழித்தடமும் மறிக்கப்பட்டு வருகிறது. இதனால் காட்டெருமை, புலி, கரடி, சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் புகுவது வழக்கமாகி விட்டது. இது மட்டுமின்றி மனித-வனவிலங்கு மோதல் நடைபெறுகிறது. மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அது குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அரவேனு பகுதியில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையில் குட்டியை முதுகில் சுமந்து கரடி உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் கரடிக்கு சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் கழித்து குட்டியுடன் அந்த கரடி அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.

இதற்கிடையில் தேயிலை தோட்டத்துக்குள் கரடி வருவதை கண்ட தொழிலாளர்கள், பச்சை தேயிலை பறிக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

அரவேனு, ஜக்கனாரை, அளக்கரை, சேலாடா, மூணுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே பணிக்கு செல்லும் தொழிலாளர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அச்சத்துடன் வெளியே சென்று வர வேண்டி உள்ளது. சாலைகளில் உலா வரும் கரடிகளால் மனிதர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரடிகள் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ உடனடியாக முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதேபோன்று மஞ்சூர் அருகே முள்ளிமலை பகுதியில் குட்டியுடன் 5 கரடிகள் தேயிலை தோட்டத்தில் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

Next Story