வேடசந்தூரில், கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
வக்கீலை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வேடசந்தூரில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்,
வடமதுரை அருகே உள்ள பிலாத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பெருமாள் தரப்பு வக்கீல் ரத்தினம் (வயது 72) மற்றும் அவரது ஜூனியர் வக்கீல் செல்வக்குமார் ஆகிய 2 பேரும் வழக்கு தொடர்பான இடத்தை பார்வையிடுவதற்காக பிலாத்திற்கு சென்றனர்.
அப்போது தனது உறவினர்களுடன் அங்கு வந்த ராஜ் குமார், நிலத்தை பார்வையிட எதிர்ப்பு தெரிவித்து ரத்தினத்தை தாக்கியுள்ளார். மேலும் தடுக்க வந்த வக்கீல் செல்வக்குமாரையும், அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரத்தினம் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜ் குமார், அவரது மனைவி நதியா (31), மற்றும் உறவினர்கள் வேலுப்பிள்ளை, ருக்மணி, காளிராஜ், மகேஷ், சுரேஷ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரை கைது செய்தனர்.
இந்தநிலையில் ரத்தினத்தை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் நேற்று வேடசந்தூர் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார், பொருளாளர் நாகராஜ், துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் ஜான்கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த வக்கீல்கள் ரெங்கராஜ், ஜெயராமன், முத்துச்சாமி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் ரத்தினத்தை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் தொடர்ந்து 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வக்கீல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story