கோத்தகிரி அருகே, காட்டுயானை தாக்கி விவசாயி சாவு


கோத்தகிரி அருகே, காட்டுயானை தாக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 18 July 2019 4:45 AM IST (Updated: 18 July 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கண்டிப்பட்டியை சேர்ந்தவர் பாலன்(வயது 73). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். பாலன் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். மேலும் வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பாலன் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆடுகளை வீட்டுக்கு விரட்டி வந்து, பட்டியில் அடைத்தார். பின்னர் தேயிலை தோட்டத்துக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் பாலன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தேயிலை தோட்டம் உள்பட அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கீழ் கோத்தகிரி அருகே உள்ள பொம்மன் காபி தோட்டம் என்ற இடத்தில், உடலில் பலத்த காயங்களுடன் பாலன் உயிரிழந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. மேலும் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் காலை 9 மணிக்கு கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் பாலனின் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது காட்டுயானை தாக்கி பாலன் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதைத்தொடர்ந்து பாலனின் உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது குடும்பத்தினருக்கு தாசில்தார் மோகனா, உதவி வன அலுவலர் சரவணகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண தொகையில் இருந்து முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கண்டிப்பட்டி பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலனை கரடிகள் தாக்கின. இதில் படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது காட்டுயானை தாக்கி உயிரிழந்து உள்ளார். கடந்த ஆண்டு ராமசாமி என்பவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்தார். இதுபோன்று தொடர்ந்து வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறோம். சுமார் 40 ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கும் எங்கள் கிராமத்தை சுற்றிலும், வனவிலங்குகள் நுழையாதபடி தடுப்புச்சுவர் கட்டித்தர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வனவிலங்குகள் தாக்குதலை கட்டுப்படுத்த வேறு ஏதேனும் நிரந்த தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story