தனியார் தேயிலை தோட்ட மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர் - சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்
அரவேனு அருகே தனியார் தேயிலை தோட்ட மரத்தில் டிரைவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அரவேனு அருகே உள்ள கீரைக்கல் பகுதியை சேந்தவர் ஜெயராஜ். இவரது மகன் தினேஷ்குமார்(வயது 25). டிரைவர். இவருடைய மனைவி கவிதா(22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தினேஷ்குமார் கடந்த 4-ந் தேதி அரவேனு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது முதல் மனைவி கவிதா, கோத்தகிரி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் தினேஷ்குமாரை அழைத்து, அறிவுரை கூறி முதல் மனைவி கவிதாவுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பன்னீர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் தினேஷ்குமார் பிணமாக தொங்கினார். இதை பார்த்த தொழிலாளர்கள் கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தினேஷ்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது முதல் மனைவி கவிதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story