23 ஆண்டுகளுக்குமுன் மாயமாகி இலங்கையில் உள்ள மீனவரை மீட்க நடவடிக்கை


23 ஆண்டுகளுக்குமுன் மாயமாகி இலங்கையில் உள்ள மீனவரை மீட்க நடவடிக்கை
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

23 ஆண்டுகளுக்குமுன் மீன்பிடிக்க சென்று மாயமாகி தற்போது இலங்கையில் உள்ள மீனவரை இந்திய தூதரகம் மூலம் மீட்க மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சல்லிமலை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பரதன் (வயது62). கடந்த 1996-ம் ஆண்டு கடலுக்கு 3 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் பரதன் இறந்துவிட்டதாக கருதப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கருதி அவர் தொலைந்து போன நாளை நினைவு நாளாக கருதி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் சமூக வலைதளம் ஒன்றில் பிச்சைக்காரர்கள் பற்றி வெளியான வீடியோ காட்சியில் பரதன் இலங்கையில் பிச்சைக்காரராக திரிவது போன்ற காட்சியை பரதனின் குடும்பத்தினர் பார்த்து அவர்தான் என்று உறுதிசெய்தனர். இந்த நிலையில் மீனவர் பரதன் கொழும்பில் பேராதன் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ளவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து குடும்பத்தினர் பரதனை மீட்கக்கோரி தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது:- மீன்பிடிக்க சென்று கடலில் சிக்கி தற்போது இலங்கையில் உள்ளதாக கூறப்படும் மீனவர் பரதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் என்பதால் இதுதொடர்பாக மீன்வளத்துறை சார்பில் மத்திய அரசின் மறுவாழ்வுத்துறை மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து பரதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story