திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
x
தினத்தந்தி 18 July 2019 3:30 AM IST (Updated: 18 July 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன், மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான மானகிரி, ஆலங்குடி, கல்லல், கம்பனூர், நாச்சியாபுரம், குன்றக்குடி, பாதரக்குடி ஆகிய பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்துவரப்பட்டன. முன்னதாக கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டன. பின்னர் கோவில் காளைகள் மஞ்சுவிரட்டு தொழுவம் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன.

அதன்பின்னர் கீரணிப்பட்டியில் உள்ள வயல்வெளி மற்றும் கண்மாய் பகுதிகளில் கட்டு மாடுகளாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு தொடங்கியது. அப்போது சீறிரீப்பாய்ந்த காளைகளை, அங்கு திரண்டிருந்த சுற்று வட்டார கிராம மாடுபிடி வீரர்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். மேலும் சில காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டிய காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. பல காளைகளை அவர்களை மிரட்டி விட்டு சென்றது. இந்த மஞ்சுவிரட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தநிலையில் மஞ்சுவிரட்டு நடத்த உரிய அனுமதி பெறவில்லை. இதனால் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி, நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கீரணிப்பட்டியை சேர்ந்த பழனியப்பன், புகழேந்தி, வேலு, பழனியப்பன், சுப்பிரமணியன் ஆகிய 5 பேர் மற்றும் காளைகளை அவிழ்த்துவிட்டதாக முருகானந்தம், ஆறுமுகம், சுப்பிரமணியன், மூக்கையா, பாண்டிச்செல்வம் ஆகிய 5 பேர் என மொத்தம் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story