சிவகாசியில் கண்மாய், ஊருணிகளில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா?


சிவகாசியில் கண்மாய், ஊருணிகளில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 July 2019 4:00 AM IST (Updated: 18 July 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மணிக்கட்டி ஊருணியில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதைதடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சிவகாசி,

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க மக்களால் ஊருணிகள் வெட்டப்பட்டு அவற்றை பாதுகாத்து வந்துள்ளனர். அதன்படி சிவகாசி பகுதியில் பொத்துமரத்து ஊருணி, மருதம் ஊருணி, மணிக்கட்டி ஊருணி ஆகியவை இருக்கிறது. இந்த ஊருணிகளுக்கு நகரின் பல்வேறு பகுதியில் இருந்தும் மழைநீர் வந்துள்ளது. இதனால் இந்த ஊருணிகளில் எப்போதும் தண்ணீர் நிரம்பியபடி காட்சி அளித்தன. இந்த ஊருணிகளில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் சிவகாசி நகராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தது. அதேபோல் நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீருக்கு ஆதாரமாக சிறுகுளம் மற்றும் பெரியகுளம் கண்மாய்கள் இருந்துள்ளது. இந்தநிலையில் காலப்போக்கில் ஊருணிகளுக்கு தண்ணீர் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கி அடைப்பட்டு போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் ஊருணிகள் வறண்டு போனது. மேலும் ஊருணிகளில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

இதேபோல் சிறுகுளம், பெரியகுளம் கண்மாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவுநீர் கலந்தும் துர்நாற்றம் வீசி வருகி றது. மேலும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் சிவகாசியில் நிலத்தடி நீர்மட்டம் தற்போது 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. சிவகாசி பகுதியில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தநிலையில், சில அமைப்புகள் நீர்நிலைகளை பாதுகாக்க முன்வந்து நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது.

இருப்பினும் கண்மாய், ஊருணிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அவற்றை ஆழப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story