தனியார்மய கொள்கையால் ரெயில் பயணத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்படும் - எஸ்.ஆர்.எம்.யூ. கன்னையா பேட்டி


தனியார்மய கொள்கையால் ரெயில் பயணத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்படும் - எஸ்.ஆர்.எம்.யூ. கன்னையா பேட்டி
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் தனியார்மய கொள்கையால் விமானத்தை வேடிக்கை பார்ப்பது போல, ரெயில்களில் பயணம் செய்வதையும் இனிமேல் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்படும் என எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கன்னையா தெரிவித்தார்.

மதுரை,

மத்திய அரசு லாபத்துடன் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க பொதுசெயலாளர் கன்னையா, மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் தனியார்மய கொள்கையால், டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் சொசுகு ரெயில் ரூ.60 கோடிக்கு தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை வாங்கியுள்ள நிறுவனம் ஆண்டுக்கு ரூ.6 கோடி என 10 வருடங்களில் இந்த தொகையை செலுத்தும். இதனால், தேஜஸ் ரெயிலின் கட்டணம் 2 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பயணிகளுக்கான டிக்கெட் கட்டணத்தில் 53 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை ரெயில்வேயின் பிற நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் லாபத்தை கொண்டு அரசு சரிக்கட்டி வருகிறது. அதேபோல, ஒவ்வொரு ரெயில்வே மண்டலத்திலும் 2 ரெயில்கள் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது.

தனியார் விமான நிறுவனங்களை அனுமதித்த பின்னர் டிக்கெட் கட்டணம் குறையும் என்று தெரிவித்தனர். ஆனால், காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர். இதனால், விமான பயணம் என்பது வேடிக்கை பார்ப்பது போல ஆகி விட்டது. அந்த நிலை ரெயிலில் பயணம் செய்வதற்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் ரபீக் உடன் இருந்தார்.

இதைதொடர்ந்து ரெயில்நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு மதுரை கோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story