சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறோம் ராஜினாமாவை திரும்ப பெற மாட்டோம் அதிருப்தி எம்.எல்.ஏ. பி.சி.பட்டீல் திட்டவட்டம்
ராஜினாமாவை திரும்ப பெற மாட்டோம் என்றும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறோம் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ. பி.சி.பட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி அடைந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் ராமலிங்கரெட்டி, ஆனந்த்சிங், கே.சுதாகர் ஆகியோர் தவிர மற்ற 12 எம்.எல்.ஏ.க்களும் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர். இதில் 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமாவை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அதைதொடர்ந்து கடந்த 13-ந்தேதி ராமலிங்கரெட்டி, எம்.டி.பி.நாகராஜ், முனிரத்னா, ஆனந்த்சிங், கே.சுதாகர் ஆகிய 5 பேரும் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த 2 மனுக்கள் மீதும் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நிர்பந்தம் செய்யக்கூடாது
அதாவது ராஜினாமா எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. ஆனால் மனு தாக்கல் செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க்களும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்யக் கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.வான பி.சி.பட்டீல் நேற்று கன்னட செய்தி தொலைக்காட்சிகளுக்கு வீடியோ அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம்
“சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம், மதிக்கிறோம். இந்த தீர்ப்பால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் அனைவரும் எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம். அதுபோல் ராஜினாமாவை திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்“.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் இன்று(வியாழக்கிழமை) சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மும்பையில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
Related Tags :
Next Story