நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்-மந்திரி குமாரசாமிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி சொல்கிறார்
சட்டசபையில் இன்று (வியாழக் கிழமை) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்-மந்திரி குமாரசாமிக்கு சில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி நேற்று கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பமான அரசியல் சூழல் உள்ளது. இந்த நிலையில் இன்று(வியாழக் கிழமை) காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசின் முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
இதற்கிடையே, நேற்று பாகல்கோட்டையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பசவராஜ் ராயரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பா.ஜனதா கட்சியினர் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து வைத்து கொண்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். இப்படி இருந்தாலும் கூட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள், குமாரசாமிக்கு ஆதரவாக கை உயர்த்த வாய்ப்புள்ளது. இதை மனதில் வைத்து தான் முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்வதாக கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பில் எனக்கு அதிருப்தி எதுவும் இல்லை. ஏனென்றால் கொறடா உத்தரவு பிறப்பிப்பது அனைத்து கட்சிகளின் உரிமை. ஆனால் சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வது என்பது அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்டது ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது சபாநாயகர் எடுக்கும் முடிவாகும். இந்த முடிவை சபாநாயகர் முறைப்படி எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story