அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தலைவர்கள் கருத்து
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி. இந்த கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. அதனால் முதல்-மந்திரி குமாரசாமி நாளை (அதாவது இன்று) அவராகவே ராஜினாமா செய்வார். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து விரைவாக முடிவு எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இது இடைக்கால தீர்ப்பு மட்டுமே. வருகிற நாட்களில் சுப்ரீம் கோர்ட்டு, சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து தீர்ப்பு கூறவுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த தீர்ப்பு புதிய போக்கை உருவாக்கும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
குதிரை பேரத்தை ஊக்குவிப்பது போல்...
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சட்டசபை காங்கிரஸ் கட்சியின் உரிமையை பறிப்பதாக உள்ளது. எங்கள் கட்சி சார்பில் தகுதி நீக்க மனு சபாநாயகரிடம் வழங்கப்பட்டு உள்ளது. கொறடா உத்தரவை மீறியதாக நாங்கள் கூறவில்லை. ஆனால் பா.ஜனதாவுடன் கைகோர்த்து கூட்டணி அரசை கவிழ்க்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இது கட்சி விரோத செயல். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மோசமானது. இது கட்சி தாவலை பாதுகாப்பது, மற்றும் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதை போல் உள்ளது. அதிகார வரம்பை மீறி செயல்படுவது போல் உள்ளது.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
சபாநாயகரின் அதிகாரம்
கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியதாவது:-
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், பிறரை நம்பி ஏமாற வேண்டாம். அவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள். உங்களை வெற்றி பெற வைத்த மக்களின் முகத்தை பாருங்கள். உங்கள் கட்சியை பாருங்கள், உங்கள் குடும்பத்தினரை பாருங்கள். உங்களின் அரசியல் எதிர்காலத்தை சற்று யோசித்து பாருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
சபாநாயகரின் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அதனால் தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கி பாதிக்கப்பட வேண்டாம். காலம் இன்னும் முடியவில்லை. நீங்கள் திரும்பி வாருங்கள். உங்களின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story