குடகு அருகே மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் கிராம மக்கள் வினோத வழிபாடு
குடகு அருகே, மழை வேண்டி தவளைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்து வினோத வழிபாடு நடத்தினர்.
குடகு,
கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள், நீர்நிலைகள் வறண்டன. மேலும் வழக்கமாக கர்நாடகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. 2-வது வாரத்தில் தான் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவிலும் மழை பெய்து வருகிறது.
குடகு மாவட்டம் பாகமண்டலாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனாலும் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் தவளைக்கு திருமணம் செய்து வைத்த வினோதம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தவளைகளுக்கு திருமணம்
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே கூடிகே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது மல்லேனஹள்ளி கிராமம். குடகு மாவட்டம் முழுவதும் மழை பெய்தாலும் இந்த கிராமத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் அந்த கிராம மக்கள் வருத்தம் அடைந்து உள்ளனர். மேலும் அங்கு விவசாய பணிகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தங்கள் கிராமத்தில் மழை பெய்யவேண்டி நேற்று கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஒன்று கூடினார்கள். அப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தவளை என தனித்தனி கூண்டில் அலங்கரித்து எடுத்து வரப்பட்டது. பின்னர் பெண் தவளை கழுத்தில் தாலி கயிறு கட்டப்பட்டது.
தவளைகளுக்கு திருமணம் நடந்த போது, அங்கு கூடியிருந்த மக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். அத்துடன் அங்குள்ள கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மதிய விருந்தும் பரிமாறப்பட்டது.
மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்வு அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Related Tags :
Next Story