கே.ஆர்.எஸ். அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றம்


கே.ஆர்.எஸ். அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 18 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து மண்டியா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மைசூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் பாகமண்டலா, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் ஆகிய பகுதிகள் உள்ளது.

தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வர தொடங்கியது. கடந்த மாதம் கே.ஆர்.எஸ். அணையின் (மொத்த கொள்ளளவு-124.80 அடி) நீர்மட்டம் 79 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு?

இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,268.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,627 கனஅடியாகவும், நீர்வெளியேற்றம் 500 கனஅடியாகவும் இருந்தது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி குறுவை சாகுபடிக்காக தமிழகத்திற்கு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1,500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாய பாசனத்திற்காக...

இதுகுறித்து காவிரி நீர்வாரிய கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தற்போது கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது குடிநீர் மற்றும் பாசனத்திற்காக மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து மண்டியா மாவட்ட விவசாய பாசனத்திற்காக கால்வாய்களில் வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அதுபோல் கபினி அணையில் இருந்து குடிநீருக்காக தான் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story