சென்னையில் வாடகை காரை விற்று பணமோசடி; 3 பேர் கைது


சென்னையில் வாடகை காரை விற்று பணமோசடி; 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2019 10:00 PM GMT (Updated: 17 July 2019 9:59 PM GMT)

சென்னையில் வாடகை காரை விற்று பணமோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை சூளை அவதான பாப்பையா சாலையை சேர்ந்தவர் சபீல் அர்பத் (வயது 28). இவர் சென்னை பெரியமேட்டில் வாடகைக்கு கார்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் டிரைவிங் தொழில் தெரிந்தவர்கள் கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தனர்.

கார்களை வாடகைக்கு எடுப்பவர்கள் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 13-ந் தேதி அன்று சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கிஷோர்குமார் (23) என்பவர் தன்னை கால்டாக்சி டிரைவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சபீல் அர்பத்திடம் வாடகைக்கு கார் கேட்டார். ஒரு காரை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்து சென்றார்.

வாடகைக்கு எடுத்து சென்ற காரை கிஷோர்குமார் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சபீல் அர்பத் தனது காரை மீட்டுத்தரும்படி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வேப்பேரி உதவி கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் கிஷோர்குமார் போலி ஆவணங்கள் மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

மேலும் அந்த காரின் பதிவு எண்ணை மாற்றி கொளத்தூரை சேர்ந்த ஜான் என்பவரின் உதவியோடு நெற்குன்றத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரிடம் ரூ.2 லட்சத்திற்கு அடமானம் வைத்ததும் தெரியவந்தது. இதையொட்டி போலீசார் கிஷோர்குமார், ஜான், சத்தியமூர்த்தி ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இன்னொரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அடமானத்திற்கு பெற்ற அந்த காரை சத்தியமூர்த்தி நெல்லையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2¼ லட்சத்திற்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாடகை காரை விற்று பணமோசடியில் ஈடுபட்ட கிஷோர்குமார், ஜான், சத்தியமூர்த்தி ஆகிய 3 பேர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில் விற்பனை செய்யப்பட்ட காரை மீட்பதற்காக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Story