திண்டுக்கல் அருகே, டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி


திண்டுக்கல் அருகே, டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 18 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் வேடபட்டி அருகே உள்ள யாகப்பன்பட்டி கோல்டன் நகரில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளர்களாக செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள், வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடப்பதையும், அதன் அருகில் மதுபான பாட்டில்கள் அடங்கிய ஒரு பெட்டி கிடப்பதையும் அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதேபோல் விற்பனையாளர் களான செல்வமும், பெரியகருப்பனும் கடைக்கு வந்தனர். அப்போது, கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு இருப்பதும் அதில் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் மதுபான பாட்டில்கள் வைக்கப்பட்ட பெட்டியை வெளியில் கொண்டுவந்து போட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி 2 வாலிபர்கள் வந்து கடையின் ஷட்டரில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்கும் காட்சியும், அதில் எதுவும் இல்லாததால் மதுபான பாட்டில்களை எடுத்து வந்து வெளியில் போடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

அதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கடையில் மோப்பம்பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த கடையில் கடந்த ஜனவரி மாதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் மதுபாட்டில்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Next Story