காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால், திராவகம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால், திராவகம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 18 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வாலிபர் ஒருவர் திருமணம் செய்ய மறுத்ததால் திராவகத்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீரபாண்டி, 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் அருண்குமார் (வயது 21). இவர் திருப்பூர் வெள்ளியங்காடு மரகதாம்பாள் லே-அவுட்டில், தனது மாமா சுப்பிரமணி வீட்டில் தங்கி, மளிகைக் கடையில் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அருண்குமாருக்கும், அந்த பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. முதலாமாண்டு படிக்கும் 17 வயது நிரம்பிய மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. அப்போது கல்லூரி மாணவியிடம் தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அருண்குமார் வாக்குறுதி கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் தெரிவித்துள் ளார். இதனை மறுத்த அருண்குமார், தன்னை தனது சொந்த ஊருக்கு திரும்பி வரும்படி தனது உறவினர்கள் கூறி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் வைத்திருந்த திராவகத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story