திருடர்கள் என நினைத்து, 4 வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் - தாராபுரத்தில் பரபரப்பு
தாராபுரத்தில் திருடர்கள் என நினைத்து 4 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்,
தாராபுரம் சங்கர்மில் பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களும், குளத்துப்புஞ்சை தெருவைச் சேர்ந்த 2 வாலிபர்களும் நண்பர்கள். இவர்களுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் நேற்று இரவு மது குடித்துவிட்டு, ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள அமராவதி சிலை ரவுண்டானா அருகே சென்றபோது, அங்கிருந்த போலீசார் இவர்களை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி சைகை காட்டினார். இதனால் அந்த வாலிபர்கள் பயந்துபோய் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனால் போலீசார் அவர்களை பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த வாலிபர்கள், போலீசார் தங்களை துரத்திக்கொண்டு வருவதாக நினைத்து பொள்ளாச்சி ரோட்டில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு நகைக்கடை முன்பு அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிவிட்டது. இதில் நிலைதடுமாறிய 4 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துவிட்டனர். இதனால் பயந்து போன வாலிபர்கள், மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் போட்டுவிட்டு, அதே ரோட்டில் ஓட்டம் பிடித்துள்ளனர்.
நகைக்கடைக்கு முன்பு இருந்து, இவர்கள் 4 பேரும் வேகமாக ஓடியதால், அருகே இருந்த பொது மக்கள், இவர்கள் 4 பேரும் நகைக்கடையிலிருந்து நகையை திருடிக் கொண்டு ஓடுகிறார்கள் என்று நினைத்து. “திருடர்கள் பிடியுங்கள்.., பிடியுங்கள்..” என்று சத்தம் போட்டவாறு, அவர்களை துரத்திச் சென்றுள்ளனர். சிறிது தூரம் வரை ஓடிய வாலிபர்களை, பொது மக்கள் மடக்கிப் பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்து, 4 பேரையும் ஒன்றாக சேர்த்து கட்டிவைத்து விட்டார்கள். அந்த வழியாக வந்தவர்கள் சிலர், என்ன வென்று விசாரித்துவிட்டு, நகை திருடர்கள் என்று் கேள்விப்பட்டதும், அவர்களும் அந்த வாலிபர்களை அடித்து உதைத்துவிட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து தாராபுரம் போலீசாருக்கு நகை திருடர்களை பிடித்து கட்டிவைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த பொது மக்கள், வாலிபர்கள் 4 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை அழைத்து வந்து, நகைக்கடை உரிமையாளர் முன்னிலையில் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது நகைக்கடைக்காரர், வாலிபர்கள் தன்னுடைய கடையில் நகை திருடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு தான் போலீசாருக்கு 4 பேரும் மது போதையில் நடந்து கொண்டு விதமும், அரன்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல, நகைக்கடைக்கு முன்பிருந்து ஒடியதால், நகை திருடர்கள் என்று பொது மக்கள் நினைத்து, அவர்களை அடித்து உதைத்த விபரம் தெரியவந்தது. போலீசார் 4 வாலிபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். குடிபோதையில் நடந்த வாலிபர்களின் அட்டகாசத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story