டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ரூ.2½ லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது
திருப்பூரில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கொங்குநகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 46). இவர் திருப்பூர் பி.என்.ரோடு நாதம்பாளையம் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ந்தேதி காலையில் யுவராஜ் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்த பணத்தை பூலுவப்பட்டி நால்ரோட்டில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக காரில் சென்றார். அவர் நால்ரோடு அருகே காரை நிறுத்தி விட்டு பணப்பையை எடுத்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஒரு ஆசாமி, யுவராஜிடம் இருந்து பணப்பையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ் பையை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் யுவராஜின் கையை வெட்டி விட்டு பையில் இருந்த ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 140-ஐ பறித்தார். பின்னர் ஏற்கனவே அங்கு மோட்டார்சைக்கிளில் தயாராக இருந்த மற்ற 2 பேருடன் அந்த ஆசாமியும் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த யுவராஜ் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு அந்த ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் நால்ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும், மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒருவர் நாகப்பட்டிணம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அருள்பிரகாஷ் (29) மற்றும் திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.பாலன் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. இதில் அருள்பிரகாஷ் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருவதும், அவருக்கு 2 மனைவிகள் இருப்பதும், இதனால் பணத்தேவை அதிகமாக இருந்ததும் தெரியவந்தது. பணதேவை குறித்து அருள்பிரகாஷ் அந்த பகுதியில் மற்ற பனியன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தனது நண்பர்களான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வள்ளிநாயகம், பூனைமணி ஆகியோரிடம் தெரிவித்தார். இதையடுத்து இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் இவருக்கு உதவியாக இருந்துள்ளார். அவர்தான், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் யுவராஜ் குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார். கோபாலகிருஷ்ணன் கூறிய தகவல் அடிப்படையில் சம்பவத்தன்று அருள்பிரகாஷ், வள்ளிநாயகம் மற்றும் பூனைமணி ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நால்ரோடு பகுதிக்கு சென்று யுவராஜை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அருள்பிரகாஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களை திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள வள்ளிநாயகம், பூனைமணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த 30 நாட்களில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்த இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான தனிப்படை போலீசாரை கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினார்.
அருள்பிரகாஷ் மீது நாகப்பட்டிணத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளும், வள்ளிநாயகம் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story