மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி + "||" + Terror near Sinnasalem, NLC Worker Beat and killed his wife

சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி

சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி
என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி, காரில் கடத்திச் சென்று எரிக்க முயன்ற அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சின்னசேலம், 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுதாகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நயினார்பாளையம் அருகே சேலம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேப்பூர் மார்க்கத்தில் இருந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம், செம்பாக்குறிச்சி அருகே வி.கிருஷ்ணாபுரம் காப்புக்காடு அருகில் சாலையோரம் ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் வி.கிருஷ்ணாபுரம் காப்புக்காடு பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையோரம் பூட்டிய நிலையில் நின்ற காரின் முன்பக்க டயர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பின்னர் போலீசார் அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இதையடுத்து காரின் அருகில் கிடந்த சாவியை எடுத்து காரை திறந்தனர்.

பின்னர் காரில் சோதனை செய்த போது, பின்பக்க இருக்கையின் கீழ்பகுதியில் ரத்தக்கறையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. உடனே போலீசார் அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், தலையில் வெட்டு காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை கைப்பற்றிய போலீசார், அதன் அடிப்படையில் விசாரித்தனர். அதில் இறந்து கிடந்தவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் மகன் பழனிவேல் (வயது 52) என்பதும், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 2-ல் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பழனிவேல் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நெய்வேலிக்கு சென்று அங்கிருந்த பழனிவேல் மனைவி மஞ்சுளாவை(45), கீழ்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் வானதிராயபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு நித்யா, நிவேதா என்ற 2 மகள்களும், பிரபு வெங்கடேசன் என்ற மகனும் உள்ளனர். இதில் நித்யா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். பழனிவேல் தனது குடும்பத்துடன் நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள நெல்லிக்கனி தெருவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேலின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் மஞ்சுளாவின் தாய் சின்னபிள்ளை, தம்பி ராமலிங்கம் ஆகியோர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றது பழனிவேலுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மஞ்சுளா அவரது பெற்றோரின் செலவுக்கு பணம் கொடுப்பதாக நினைத்த பழனிவேல், மஞ்சுளாவிடம் வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா தனது தம்பியுடன் சேர்ந்து பழனிவேலை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பழனிவேல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மஞ்சுளா, ராமலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து இரும்பு கம்பியால் பழனிவேலின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதையடுத்து மஞ்சுளா உள்ளிட்ட 4 பேரும் பழனிவேலின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் வைத்து கட்டியுள்ளனர். பின்னர் அதை பழனிவேலுக்கு சொந்தமான காரில் போட்டுக் கொண்டு சின்னசேலம் அருகே உள்ள வி.கிருஷ்ணாபுரம் காப்புக்காடு பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு, மஞ்சுளா உள்ளிட்ட 4 பேரும் இறங்கியுள்ளனர். பின்னர் பழனிவேல் உடலை காரிலேயே போட்டு விட்டு, கார் கண்ணாடி மற்றும் கதவை பூட்டி விட்டு சாவியை தூக்கி வீசியுள்ளனர். அதனை தொடர்ந்து பழனிவேல் விபத்தில் இறந்ததாக, அனைவரையும் நம்ப வைப்பதற்காக காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து செம்பாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் செல்லமுத்து, கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராமலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

என்.எல்.சி. ஊழியரை அவரது மனைவியே கொலை செய்து உடலை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...