பொள்ளாச்சி அருகே பரபரப்பு, நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
பொள்ளாச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காளிதாசுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக காளிதாஸ் தனிமையில் இருந்தார்.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 17 வயதான மாணவி ஒருவர் இருந்துள்ளார். அவரது தாய் வேலைக்கு சென்று விட்டார். தந்தையும் சென்னைக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததை பார்த்த காளிதாஸ் திடீரென்று அந்த வீட்டுக்குள் புகுந்துள்ளார்.
இதை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் காளிதாஸ், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே அந்த மாணவி அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதை பார்த்த காளிதாஸ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி நேற்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மகிளா கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொள்ளாச்சியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story