மும்பை குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்
மும்பையில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 28 மணி நேரம் நடந்த மீட்பு பணி நிறைவு பெற்றது. இதில் மொத்தம் 13 பேர் பிணமாகவும், 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.
மும்பை,
மும்பை டோங்கிரியில் நேற்றுமுன்தினம் காலை கேசர்பாய் என்ற பழமையான 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் இடிபாடுகளில் புதைந்தனர். வாகனங்கள் செல்ல முடியாத மிகவும் குறுகலான பகுதி என்பதால் கடும் சவாலுக்கு மத்தியில் மீட்பு பணி நடந்தது. மீட்பு படையினர் கைகளால் இடிபாடுகளை அகற்றி சிக்கியிருந்தவர்களை மீட்க போராடினார்கள். இதற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உதவினர்.
நேற்றுமுன்தினம் இரவு வரை இடிபாடுகளில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் இடிபாடுகளில் சிக்கி தவித்த 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவும் மின்னொளி வெளிச்சத்தில் மீட்பு பணி நடந்தது. தொய்வாக நடந்த மீட்பு பணியை துரிதமாக செய்வதற்கு வசதியாக சிறிய ரக பொக்லைன் எந்திரம் குறுகலான அந்த பாதை வழியாக கட்டிடம் இடிந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதன்பின்னர் மீட்பு பணி முழுவீச்சில் நடந்தது. விடிய, விடிய நடந்த இந்த பணி நேற்றும் நீடித்தது. இதில் இடிபாடுகளில் இருந்து மேலும் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
மீட்பு பணி நிறைவு
இந்த நிலையில், கட்டிட இடிபாடுகள் அனைத்தும் நேற்று பிற்பகல் அகற்றி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் மக்கள் தொடர்பு அதிகாரி சச்சிதானந்த் காவ்டே கூறுகையில், “மீட்பு பணி 28 மணி நேரம் நடந்தது. இதில் மொத்தம் 22 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் பிணமாகவும், 9 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். பிணமாக மீட்கப்பட்டவர்களில் 6 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆவர்” என்றார்.
முன்னதாக குடியிருப்பு விபத்தில் 55 பேர் வரை புதைந்து இருக்கலாம் என கூறப்பட்டது. மாநில அரசு, மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை குறித்து குழப்பமான தகவல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.5 லட்சம் நிவாரணம்
இதற்கிடையே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
Related Tags :
Next Story