தாளவாடி அருகே, ஆட்டை அடித்துக்கொன்று சிறுத்தைப்புலி மீண்டும் அட்டகாசம் - பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே சிறுத்தைப்புலி ஆட்டை அடித்துக்கொன்று மீண்டும் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள பீம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை ஆனந்த் அந்தப்பகுதியில் உள்ள அவருடைய தோட்டத்தில் மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது திடீரென ஒரு ஆடு அலறும் சத்தம் கேட்டது. இதனால் அருகே உள்ள தோட்டங்களில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஒரு ஆடு கழுத்துப்பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது. மேலும் சற்று தொலைவில் சிறுத்தைப்புலி ஒன்று ஓடியதையும், அவர்கள் கவனித்தனர். இதனால் சிறுத்தைப்புலிதான் ஆட்டை அடித்துக்கொன்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று, இறந்து கிடந்த ஆட்டை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஆடு இறந்து கிடந்த பகுதியில் பதிவாகியிருந்த சிறுத்தைப்புலியின் கால் தடத்தை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘தாளவாடி பகுதியில் அடிக்கடி சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் நாங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்பட்டு வருகிறோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடியை சேர்ந்த மணி என்பவரின் ஆட்டை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்றது. மீண்டும் தற்போது ஒரு ஆட்டை அடித்துக்கொன்றுள்ளது. ஆடுகளை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்’ என்றனர். சிறுத்தைப்புலி மீண்டும் ஆட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story