கனிமார்க்கெட் கடைகளை இடிக்க வந்த பொக்லைனை சிறைபிடித்து ஜவுளி வியாபாரிகள் திடீர் போராட்டம்
கனி மார்க்கெட் கடைகளை இடிக்க வந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து ஜவுளி வியாபாரிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோட்டுக்கு ஜவுளி மாநகரம் என்ற பெயர் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜவுளி உற்பத்தியில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சிறந்து விளங்குகின்றன. இந்த உற்பத்தியாளர்களின் பொருட்களை விற்பனை செய்யும் பெரிய சந்தையாகவும் ஈரோடு விளங்கி வருகிறது.
இவ்வாறு ஜவுளி உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும் இணைக்கும் சந்தையாக இருப்பது ஈரோடு கனி மார்க்கெட். இதுபோல் காந்திஜி ரோடு சென்டிரல் தியேட்டர் ஜவுளி மார்க்கெட், அசோகபுரம் சி.டி.மில் வளாக மார்க்கெட் மற்றும் கங்காபுரம் டெக்ஸ்வேலி ஜவுளி சந்தையும் வாரம் தோறும் கூடுகின்றன.
இதில் கனி மார்க்கெட் மட்டுமே ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். இந்த மார்க்கெட் ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்த ஈ.கே.எம்.அப்துல்கனி என்பவர் ஏற்படுத்தியது. எனவே அவருடைய பெயரால் ஈ.கே.எம்.அப்துல்கனி மாநகராட்சி ஜவுளி சந்தை என்றே அழைக்கப்படுகிறது.
இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஜவுளிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த சந்தையில் பெரும்பாலும் உற்பத்தியாளர்கள் நேரடியாக வந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
கனி மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே தேவையான வசதிகள் செய்து தரவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி மூலம் இங்கு நவீன வணிக வளாகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன ஜவுளி வணிக வளாகம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.51½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இங்கு பிரமாண்டமான வணிக வளாகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதை முன்னிட்டு இங்கு தினசரி கடை மற்றும் வாராந்திர கடை நடத்தி வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பெரிய தற்காலிக சந்தை அமைக்கும் அளவுக்கு போதிய இடம் கிடைக்காததால் தற்போதைய சந்தையிலேயே ஒரு இடத்தை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த இடம் போதுமானதாக இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மேலும், தீபாவளி முடியும் வரை மார்க்கெட் பணிகள் செய்யக்கூடாது என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பகல் 11.30 மணி அளவில் கனி மார்க்கெட் பகுதிக்கு ஒரு பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. பொக்லைன் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் வந்தனர். அவர்களிடம் அங்குள்ள வியாபாரிகள் விசாரித்தபோது, கனி மார்க்கெட் பகுதியில் உள்ள 13 கடைகளை இடித்து அகற்றுவதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் அனைத்து வியாபாரிகளும் 5 நிமிடத்தில் அங்கு திரண்டனர். அவர்கள் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து அங்கேயே நடுரோட்டில் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், கனிமார்க்கெட் வாராந்திர ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், தீரன் சின்னமலை சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நீதிமோகன், பொருளாளர் அமானுல்லா, தியாகி குமரன் அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் மூர்த்தி, ஈ.கே.எம்.அப்துல்கனி ஜவுளி அங்காடிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்துல்பாரி ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாதிக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இது அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, ராம் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மாநகராட்சி ஆணையாளர் வந்து உரிய விளக்கம் அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பின்னர் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர் சண்முகவடிவு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஆணையாளர் தற்போது ஊரில் இல்லை எனவும், அவர் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். வியாபாரிகளும் அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் பகல் 12.45 மணிவரை தொடர்ந்தது.
இதுகுறித்து செயற்பொறியாளர் விஜயகுமார் கூறியபோது, ‘கனி மார்க்கெட்டில் இருக்கும் பழைய கடைகள் பல பழுதடைந்து உள்ளன. இவை இடிந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவே அதை இடிக்க வந்தோம். மற்றபடி கடைகள் அகற்றப்படுவது, அதில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும் இடம் ஆகியவை குறித்து விவரமாக தெரிவித்த பிறகே பணிகள் தொடங்கும்’ என்றார்.
வியாபாரிகள் தரப்பில் நிர்வாகிகள் கூறும்போது, “மாநகராட்சி சார்பில் கனி மார்க்கெட்டில் மேற்கொள்ளும் எந்த பணி குறித்தும் முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை. இங்கு 5 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. எந்த முன் அறிவிப்பும் இன்றி கடைகளை அகற்றக்கூறுகிறார்கள். இது எப்படி முடியும்?. நாங்கள் வியாபாரத்துக்காக பலரிடம் லட்சக்கணக்கில் பணமும், பொருட்களும் கடன் வாங்கி இருக்கிறோம். கடைகள் அகற்றப்படுகின்றன என்ற தகவல் வந்ததும் எங்களுக்கு கடன்கொடுத்தவர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். நாங்கள் கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வசூலிக்க முடியவில்லை. எனவேதான் கடைகளை இடிப்பது எங்களுக்கு அச்சத்தை தருகிறது. எங்களுக்கு உடனடி மாற்று ஏற்பாடு செய்வதுடன், இங்கு கடை நடத்தும் அனைவருக்கும் புதிய வணிக வளாகத்தில் கடை வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் எங்களுக்கு வேண்டும். இங்கு 40 ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் எங்களை வெளியேற்றி விடாதீர்கள் என்றே கேட்கிறோம்” என்றார்கள்.
கனி மார்க்கெட் பிரச்சினையில் உரிய முடிவு எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தவும் வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story