வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 50 வேட்புமனுக்கள் தாக்கல் கடைசிநாளில் 16 பேர் மனு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று மட்டும் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். வேட்புமனுதாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான 11-ந் தேதியே அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி மனுதாக்கல் செய்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று முன்தினம் வரை 30 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 33 மனுக்கள் பெறப்பட்டிருந்தது. மனுதாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். காலை 11 மணி முதல் 3 மணிவரை அவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
ஏற்கனவே வேட்புமனுதாக்கல் செய்திருந்தவர்களும் நேற்று தங்கள் பெயரில் கூடுதலாக மனுதாக்கல் செய்ய வந்திருந்தனர். ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்ய வந்திருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்யும் இடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி கடைசி நாளான நேற்று மீண்டும் தனது பெயரில் மனுதாக்கல் செய்தார். இவர் 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு மாற்றாக நேற்று தனலட்சுமி என்பவரும் மனுதாக்கல் செய்தார். இந்திய குடியரசு கட்சி (தமிழ்நாடு) சார்பில் பி.சதீஷ், குடியரசு சேனா கட்சி சார்பில் விஜய்பவுல்ராஜா, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ்குமார், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் செல்லப்பாண்டியன், தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் அபிபுல்லா ஆகியோர் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோன்று காட்பிரேநோபிள், ஏ.ஜி.சண்முகம், ராஜசேகர், எஸ்.சண்முகம், ஜி.முரளி, உமாசங்கர், செல்வகுமார், கருணாநிதி ஆகியோரும் வேட்புமனுதாக்கல் செய்தனர். இவர்கள் 16 பேரிடமிருந்து 17 மனுக்கள் பெறப்பட்டது. இதன் மூலம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 22-ந் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன் மனுதாக்கல் செய்யவந்த போது மதுகுடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடவேண்டும், அப்படி சாப்பிட்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது, அவர்களுடைய மனைவிகளின் தாலிக்கும் பாதிப்பு வராது என்பதை வலியுறுத்தி கொய்யாப்பழம் மற்றும் மஞ்சள் கயிற்றில் மஞ்சள்களை கட்டி தனது கழுத்தில் மாலையாக தொங்கவிட்டபடி வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் தமிழில் விண்ணப்பம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story