கிருஷ்ணகிரியில் முஸ்லிம் மகளிருக்கு குடும்ப நல கலந்தாய்வு திட்டம் கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரியில் முஸ்லிம் மகளிருக்கு குடும்ப நல கலந்தாய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான நலத்திட்டங்களில் ஒன்றான முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள முஸ்லிம் மகளிருக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
முஸ்லிம் மகளிருக்கு நலத்திட்டங்களை தவிர்த்து பல்வேறு நேர்வுகளில் குடும்ப நல ஆலோசனைகள் வழங்கப்பட்டால், அவர்கள் விழிப்புணர்வு பெற்று வாழ்க்கை தரம் உயர வழி வகுப்பதுடன், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் வழி வகுக்கும். அவர்களது மதப் பண்பாட்டின் படி, வெளியிடங்களுக்கு குறிப்பாக காவல் நிலையங்களில் செயல்படும் குடும்ப நல ஆலோசனை மையங்களுக்கு சென்று உதவி பெறும் வகையில்லாத காரணத்தினால், தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் கீழ் செயல்படும் குடும்ப ஆலோசனை மையத்தின் ஆலோசகர்களை இப்பணியில் ஈடுபடுத்திட அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் இயங்கி வரும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமூக நலத்துறை சார்ந்த ஆலோசகர்கள் நேரடியாக வந்து முஸ்லிம் மகளிருக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் மகளிர், இந்த ஆலோசனை மையத்திற்கு சென்று, தக்க விழிப்புணர்வு பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story