பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி எண்ணூர் துறைமுகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி எண்ணூர் துறைமுகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 18 July 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி எண்ணூர் துறைமுகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே எண்ணூர் காமராஜர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராடங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஒப்பந்த தொழிலாளர்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இதனை தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்திய நிலையில் நேற்று எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் நுழைவுவாயில் முன்பு தமிழ்நாடு ரீ ஜெனரல் ஒர்க்ஸ் யூனியன் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், ரவி ஆகியோர் தலைமையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

துறைமுகத்திற்கு மத்திய அரசு அனுமதித்த பணியிடங்களை முழுமையாக நிரப்பப்பட வேண்டும். மூரிங் பிரிவு தொழிலாளர்கள் 25 பேரை நிரந்தர தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி சந்திரன், விஜயன், முகமது அசேன் ஆகியோருக்கு பணி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மூரிங் தொழிலாளர்கள் சார்பில் மாரியப்பன், துரைசாமி, கஜேந்திரன், பாலன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

துணை தாசில்தார் மதி, இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story