டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பு இல்லை விவசாயிகள் கவலை


டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பு இல்லை விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் மழை பெய்த போதிலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர், 

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இருப்பினும் கேரளா, கர்நாடகாவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கேரள மாநிலம் வயநாடு பகுதியையொட்டி கர்நாடகாவில் அமைந்துள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அந்த மாநில பாசன தேவைக்காக வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இதன்படி வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து மேட்டூருக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வினாடிக்கு பல லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலைமை மாறி, வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சியாக காணப்படுகிறது. இதனால் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூருக்கு குறைந்த அளவே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த தண்ணீர் வந்தடைய காலதாமதம் ஆகவும் வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் தண்ணீர் குறைவாக இருந்ததால் திறக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 40.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடி இருப்பதுடன், அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து இருந்தால் தான் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சாத்தியக்கூறுகள் ஏற்படும். ஆனால் தற்போதைய நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வாய்ப்புகள் இல்லாததால், மேலும் கால தாமதம் ஆகும். இதனால் டெல்டா மாவட்ட பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story