குடியிருப்பு வளாகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வாலிபரால் பரபரப்பு


குடியிருப்பு வளாகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் அக்காவை பார்க்க காவலாளி உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரத்தில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் சாய்ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சூர்யகாந்த் (வயது 38). இவருடைய மனைவி சுனிதா (35). சாப்ட்வேர் என்ஜினீயர்களான இருவரும், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சுனிதாவின் தம்பி தீபக், தனது அக்காவை பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார். நள்ளிரவில் வந்ததால் அவரை, சொகுசு பங்களா குடியிருப்புக்குள் விட அங்கிருந்த காவலாளிகள் மறுத்தனர். இதனால் காவலாளிகளுக்கும், தீபக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தீபக், தனது காருக்குள் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி 2 முறை சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளிகள், உயிருக்கு பயந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தீபக் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு மீண்டும் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போரூர் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, மாங்காடு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சுனிதாவை பார்க்க அவரது தம்பி தீபக் கேரளாவில் இருந்து காரில் புறப்பட்டு வந்து உள்ளார். அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என சுனிதா கூறி உள்ளார். ஆனால் அதையும் மீறி தீபக் வந்துள்ளார். இதனால் தீபக்கை உள்ளே விடவேண்டாம் என குடியிருப்பு வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்த காவலாளிகளிடம் சுனிதாவே கூறியதாகவும், அதனாலேயே தீபக்கை காவலாளிகள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தீபக், காவலாளிகளை மிரட்ட காரில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தீபக்கிற்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவரை உள்ளே அனுப்ப வேண்டாம் என காவலாளிகளிடம் சுனிதா கூறியதாகவும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எனவே குடும்ப பிரச்சினை காரணமாக அக்காவை தீர்த்துக்கட்டும் நோக்கில் தீபக் துப்பாக்கியுடன் காரில் சென்னை வந்தாரா?. எதற்காக தம்பி என்றும் பாராமல் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என காவலாளிகளிடம் சுனிதா கூறினார்?. தீபக்கிற்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கேரளா சென்ற தீபக்கை நேரில் அழைத்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story