தூத்துக்குடியில் கடல் வழி ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தூத்துக்குடியில் கடல் வழி ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 July 2019 3:00 AM IST (Updated: 18 July 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி,

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போலீசார் கடலோரங்களில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்கவும், கடத்தலை தடுப்பதற்கும் பல்வேறு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து அவ்வப்போது ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ‘சாகர் கவாச்’ என்னும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, கியூ பிரிவு போலீசார், மற்றும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி கடற்படையை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகள் போன்று வேடம் அணிந்து கடல் வழியாக ஊடுருவி, மக்கள் கூடும் முக்கிய இலக்குகளை தாக்கும் திட்டத்துடன் போலி வெடிகுண்டுகளுடன் களம் இறங்கினர்.

அவர்களை தேடி கைது செய்வதற்கான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கடலில் படகுகளில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நடுக்கடலில் வந்த மீன்பிடி படகுகளையும் சோதனை செய்து வந்தனர்.

அப்போது தூத்துக்குடி அருகே உள்ள வான்தீவு பகுதியில் வந்த ஒரு படகை சோதனை செய்தனர். அந்த படகில் பயங்கரவாதிகள் வேடம் அணிந்த 4 பேர் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்களை கைது செய்தனர். இதே போன்று திருச்செந்தூர், தருவைகுளம் பகுதியிலும் 3 பேரை கடலோர பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த 2 பேரை மத்தியபாகம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நேற்று ஒரே நாளில் 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை நடக்கிறது.

Next Story