அம்பை அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு
அம்பை அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
அம்பை,
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து ஆகியோர் நெல்லை மாவட்டம் அம்பை அருகே கவுதமபுரியில் உள்ள வண்டன் குளக்கரையில் ஒரு சதிக்கல் இருப்பதை கள ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.
இந்த சதிக்கல் 2½ அடி உயரம், 1 அடி அகலம் உள்ளது. இதில் ஆண், பெண் இருவரும் அமர்ந்த நிலையிலான சிற்பங்கள் உள்ளன. சதிக்கல் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு உள்ளது. சிற்பத்தின் மீது அழகான தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக திறந்த வெளியில் இருந்ததால் முகம் தேய்ந்துள்ளது.
இதுகுறித்து தலைவர் ராஜகுரு கூறியதாவது:-
முற்காலத்தில் இறந்துபோன கணவருடன், அவருடைய மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்த பின்பு அவர்களின் நினைவாக நிறுவப்படும் நினைவுச்சின்னம் ‘சதிக்கல்’ என்று அழைக்கப்படுகிறது. சதிக்கல் சிற்பத்தில் கணவனுடன் மனைவி இருப்பது போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதை காட்ட கையை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவார். இந்த சதிக்கல் கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பாளர்கள்.
அம்பை அருகே தற்போதும் வழிபாட்டில் உள்ள இந்த சதிக்கல்லை, கவுதமபுரி பகுதி மக்கள் தீப்பாஞ்சம்மன் என்று அழைக்கின்றனர். எண்ணெய் செக்கு இருந்த காலத்தில் தினமும் எண்ணெயால் அபிஷேகம் செய்துள்ளனர்.
கவுதமபுரியில் உள்ள மக்கள் கரையடி முனீசுவரர் கோவில் வழிபாட்டின் போது இதையும் வழிபடுகிறார்கள். இந்த சதிக்கல்லின் அமைப்பை கொண்டு பார்க்கும் போது 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று அறியப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story