வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஓட்டு இல்லை
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் போட்டியிடவில்லை. போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு இந்த தொகுதியில் ஓட்டு இல்லை.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. வேலூர் தொகுதியில் போட்டியிட 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க இருந்தது. அப்போது அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு தற்போது தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. இதனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளராக கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் வேலூர் தொகுதியில் ஓட்டுகிடையாது.
ஏ.சி.சண்முகத்துக்கு ஆரணியிலும், கதிர்ஆனந்துக்கு காட்பாடியிலும் ஓட்டு உள்ளது. வேலூரில் ஓட்டு இல்லாததால் இந்த தேர்தலில் அவர்கள் இருவரும் தங்களுக்கு வாக்களிக்கமுடியாது.
Related Tags :
Next Story