அடமானம் வைத்த தானியத்தை விற்று பல கோடி மோசடி 7 பேர் கைது


அடமானம் வைத்த தானியத்தை விற்று பல கோடி மோசடி 7 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2019 3:30 AM IST (Updated: 19 July 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

அடமானம் வைத்த தானியத்தை விற்று பல கோடி மோசடி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனா.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தனியார் வங்கிகளில் தானியம் ஈட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆரணி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் விளை நிலங்களில் விளைந்த நெல் போன்றவற்றை அடமானம் வைத்து தானிய ஈட்டு கடன் பெற்று உள்ளனர். விவசாயிகள் அடமானம் வைத்த தானியங்கள் வங்கிகள் மூலம் ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனத்தின் குடோனில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

அந்த ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், முகவர்கள் மூலம் குடோனில் உள்ள நெல் போன்ற அடமானமாக வைக்கப்பட்டு உள்ள தானியங்களை யாருக்கும் தெரியாமல் கொஞ்சம், கொஞ்சமாக விற்பனை செய்து வந்து உள்ளனர்.

மேலும் வங்கிகளில் கடன் வாங்கிய சில விவசாயிகளும் கடனுக்கான தவணையை கட்டாமல் இருந்து உள்ளனர். இந்த நிலையில் தனியார் வங்கி அதிகாரிகள் தானியங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள தனியார் ஏஜென்சி குடோனில் சோதனை நடத்தினர்.

அப்போது விவசாயிகளின் தானியங்கள் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள், முகவர்கள் மூலம் விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கி அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆரணியை சேர்ந்த வினோத்குமார், ராஜேஷ், கார்த்திகேயன், வேல்முருகன், அரிபிரசாத், ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாஷ், கிஷோர்கண்ணன் ஆகிய 7 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story