கசாரா அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்


கசாரா அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 19 July 2019 4:15 AM IST (Updated: 19 July 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

கசாரா அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. இதில் பயணிகள்காயமின்றி உயிர்தப்பினர்.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. - உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் இடையே முன்பதிவு இல்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த ரெயில் கோரக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3.50 மணியளவில் கசாரா - இகத்புரி இடையே மலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த ரெயில் தடம் புரண்டது.

ரெயிலின் கடைசியில் இருந்து இரண்டாவது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. அப்போது ரெயில் பெட்டி பயங்கரமாக குலுங்கியது.

இதனால் பயணிகள் திடுக்கிட்டு அலறினர். விபரீதத்தை உணர்ந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். தடம்புரண்ட அந்த ரெயில் பெட்டி அதிர்ஷ்டவசமாக கவிழவில்லை. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

மலை பகுதியில் தடம் புரண்டதால் பள்ளத்தாக்கின் மேல் பகுதியில் அந்த ரெயில் நின்றது. இது ரெயிலில் இருந்த பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. அவர்கள் பாதுகாப்பாக ரெயிலில் இருந்து மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மீட்பு ரெயில் கொண்டு வரப்பட்டு பயணிகள் இகத்புரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து கோரக்பூர் நோக்கி மாற்று ரெயில் இயக்கப்பட்டு அதில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தடம்புரண்ட ரெயிலை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த வழித்தடத்தில் வந்த ரெயில்கள் அங்குள்ள மற்ற இரண்டு தண்டவாளங்கள் வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக பெரியளவில் ரெயில் சேவை பாதிக்கப்படவில்லை என மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Next Story