குளித்தலை அருகே கார் மோதி தொழிலாளி பலி பெண் உள்பட 2 பேர் படுகாயம்


குளித்தலை அருகே கார் மோதி தொழிலாளி பலி பெண் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 7:32 PM GMT)

குளித்தலை அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

குளித்தலை,

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள பழமானேரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 30), பூதலூர் அருகேயுள்ள ஐம்பதுமேல்நகரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் (40) மற்றும் சிலர் குளித்தலை அருகேயுள்ள மருதூர் காவிரி ஆற்றுப்பகுதியில் மண் பரிசோதனை செய்வதற்காக ஆழ்குழாய் அமைக்கும் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்க்கின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் ராஜா மற்றும் ஜான்கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் காய்கறி வாங்குவதற்காக மருதூர் பகுதிக்கு வந்துவிட்டு, மீண்டும் தாங்கள் வேலை செய்யும் காவிரி ஆற்றுப்பகுதிக்கு திருச்சி-கரூர் தேசியநெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் ஒன்று நடந்து சென்ற 2 பேர் மீதும் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜான்கிறிஸ்டோபர் சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜா மற்றும் காரில் வந்த கும்பகோணம் குடவாசல் அருகே உள்ள பரகதாபாத் அல்முகமதியார் தெருவை சேர்ந்த பக்கீர்முகமதுவின் மனைவி சம்ஷாத்பேகம் (63) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தார். பக்கீர் முகமது எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ராஜாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும், சம்ஷாத்பேகத்தை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜான்கிறிஸ்டோபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தியதில், காரில் வந்த பக்கீர் முகமது மற்றும் அவரது மனைவி சம்ஷாத்பேகம் ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் சாலை விபத்தில் பக்கீர்முகமது, சாம்ஷாத்பேகம் ஆகிய இருவரது செல்போன்கள், சில உடைமைகள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story