கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி: நாகையில், கடல் வழியாக ஊடுருவ முயன்ற 6 பேர் கைது


கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி: நாகையில், கடல் வழியாக ஊடுருவ முயன்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2019 4:45 AM IST (Updated: 19 July 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடல் வழியாக ஊடுருவ முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம்,

நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கடற்படை போலீசார் ஆகியோர் இணைந்து ஆண்டுதோறும் தீவிரவாத ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அதன்படி நேற்று கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் “சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி“ நாகையில் நடந்தது.

அப்போது நாகூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதி, திருக்கடையூரில் உள்ள உயர்மின் அழுத்த மின்சார அலுவலகம் உள்ளிட்டவற்றை தகர்க்க தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவியதாக தகவல் கிடைத்து இருப்பதாக அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஊடுருவ முயன்ற 4 பேரையும், நாகூர், திருக்கடையூருக்கு ஊடுருவ முயன்ற 2 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்து நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களில் 2 பேர் கடல் பாதுகாப்பு படை வீரர்கள். 2 பேர் சென்னை ஆயுதப்படை கமாண்டோ பிரிவை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்தவர் ஒருவரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒருவரும் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார், 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ‘ரெட் ரேஞ்ச்’ என்ற அதிவேகமாக வெடிக்கும் 3 டம்மி குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாகை மாவட்டத்தில் உள்ள 51 கடலோர கிராமங்களில் நடந்தது.


Next Story