கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அதிரடி


கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அதிரடி
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

புதுச்சேரி, 

கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து வந்து மும்பையில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடல் வழியாக அச்சுறுத்தல், தீவிரவாத ஊடுருவல், போதை பொருள் கடத்தல் மற்றும் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து கடலோர பாதுகாப்பு படையினரால் ஆண்டுக்கு 2 முறை ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் நேற்று காலை புதுச்சேரி கடலோர எல்லையான கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரையிலான 18 மீனவ கிராமங்களை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அந்தந்த கிராமங்களில் வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கிழக்கு, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். கடற்கரை பகுதிகளில் சந்தேகப்படும்படியாக வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதுதவிர கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் தன்வந்தரி தலைமையில் தங்களது படகில் ரோந்து வந்தனர்.

காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், குருசுகுப்பம், வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டினம், நல்லவாடு, பனித்திட்டு, நரம்பை, மூர்த்திகுப்பம் என கடற்கரை பகுதிகளில் இந்த சோதனை கெடுபிடியாக நடத்தப்பட்டது. அப்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு திரும்பிய மீனவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடல் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அடையாள அட்டை இல்லாமல் கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்களை போலீசார் எச்சரித்தனர்.

கடலோர பாதுகாப்பு ஒத்திகையையொட்டி புதுவை சட்டமன்றத்துக்கு வந்தவர்கள் அனைவரையும் பணியில் இருந்த சபைக்காவலர்கள் சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். பொதுப்பணித்துறை பணிநீக்க ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் அமைச்சர்களை சந்திக்க வந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக செல்ல அனுமதிக்கப்படாததால் சபைக்காவலர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அமைச்சர்கள், அவர்களது செயலாளர்களை சந்திக்க வந்தவர்களையும் சபைக்காவலர்கள் சோதனை நடத்திய பிறகே அனுமதித்தனர். இதனால் சட்டசபை வளாகம் நேற்று பரபரப்பாகவே காணப்பட்டது.

Next Story