கொரடாச்சேரி, கோட்டூரில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ஆனந்த் ஆய்வு


கொரடாச்சேரி, கோட்டூரில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ஆனந்த் ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2019 4:30 AM IST (Updated: 19 July 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி, கோட்டூரில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டக்குடி வாய்க்காலில் ரூ.18 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் ஒட்டக்குடி வாய்க்கால் பாசனதாரர் சங்கம் மூலம் பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் மற்றும் மதகுகள் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து பாசனதாரர் சங்க பிரதிநிதிகளிடம், கலெக்டர் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் வெண்ணாறு வடிநில கோட்ட பொறியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேபோல் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தில் ரூ.29½ லட்சம் மதிப்பில் குலமாணிக்கம் அமராவதி வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கம் மூலம் பெரியகுருவாடி வாய்க்கால் மற்றும் அமராவதி வடிகால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ள அளவீடுகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் நந்திமாங்குடி கிராமத்தில் ரூ.14½ லட்சம் மதிப்பில் நந்திமாங்குடி வடிகால் வாய்க்கால் பாசனதாரர் சங்கம் மூலம் பூசனங்குடி வாய்க்கால் குறுக்கே உள்ள நந்திமாங்குடி வாய்க்கால் தூர்வாரும் பணிகள், நீர்குமிழி மதகு கட்டுமானம் பழுது நீக்கம் பணிகள் நடைபெற்று வருவதை அவர் பார்வையிட்டார்.

கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராயநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் முள்ளியாற்றின் பிரிவு மேட்டுப்பாளையம் வாய்க்கால் பாசனதாரர் சங்கம் மூலம் மேட்டுப்பாளையம் வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் தலைப்பு மதகு பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மழவராயநல்லூர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் சேரி தட்டாங்கோவில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார். இந்த பணிகளை விரைந்து முடிக்க பாசன சங்க பிரதிநிதிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வம் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story