கள்ளக்குறிச்சியில் கோர விபத்து, கோவையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்-மினிலாரி மோதல் - 10 பேர் உடல் நசுங்கி பலி


கள்ளக்குறிச்சியில் கோர விபத்து, கோவையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்-மினிலாரி மோதல் - 10 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 19 July 2019 12:00 AM GMT (Updated: 18 July 2019 8:18 PM GMT)

கோவையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்சும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி பலியாகினர். கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தாராபுரத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தெய்வநாயகபுரத்தை சேர்ந்த சங்கரேஸ்வரன் என்பவர் ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்தார்.

அதன்படி காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள உத்திரமேரூரில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 13 பேரை வேலைக்கு அழைத்தார். அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஒரு மினி லாரியில் தாராபுரத்துக்கு புறப்பட்டனர். மினிலாரியை தெய்வவிநாயகபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன்(வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. கள்ளக்குறிச்சியில் உள்ள ஏமப்பேர் புறவழிச்சாலையில் சென்ற போது ஆம்னி பஸ்சும், மினிலாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில் மினிலாரி அப்பளம் போல் நொறுங்கி, உருக்குலைந்தது. மேலும் ஆம்னி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் மினிலாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆம்னி பஸ் டிரைவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயன்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன்(56), மினிலாரி டிரைவர் மணிகண்டன் மற்றும் மினிலாரியில் வந்த ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் உண்டாவிலே கிராமத்தை சேர்ந்த லகோனியா மகன் முகேந்தர்முனியா(35), கீராமன்எசாக் மகன் தருர்ரஜாத்(30), கிரு‌‌ஷ்ணாரஜாத் மகன் அனோஜ்குமார்(20), சீசை கிராமத்தை சேர்ந்த யூதர்ரஜாத் மகன் சம்மன்ரஜாத்(28), லக்கன்குனியா மகன் ராஜ்துனியா(30), அருண்தாஸ் மகன் சோட்டுகுமார்(23), மங்கல்தாகா பகுதியை சேர்ந்த அனோஜ்முனியா(35) ஆகிய 9 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி பிணமாக கிடப்பது தெரியவந்தது.

மேலும் உண்டா பகுதியை சேர்ந்த தெக்கோனியா மகன் அசோக்(27), விருதுநகர் அருகே கோவிந்தநல்லூரை சேர்ந்த கருப்பையா தேவர் மகன் மீனாட்சி சுந்தரம்(33), தெய்வவிநாயகபுரம் கூடாண்டி மகன் லிங்கம்(35), சீசை பகுதியை சேர்ந்த சுக்குதேவ்ரஜாத்(53), பப்லுரஜாத்(27), மங்கல்தாகா பகுதியை சேர்ந்த சாம்தேவ்(30) மற்றும் ஆம்னி பஸ்சில் வந்த மாற்று டிரைவர் கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன்(28) ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசோக் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் ரவிச்சந்திரன் கோவையில் உள்ள மருத்துவமனைக்கும், மீனாட்சி சுந்தரம், சுக்குதேவ்ரஜாத், பப்லுரஜாத், சாம்தேவ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். லிங்கம் மட்டும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story