வால்பாறையில் உரிமம் வழங்குவதற்காக மரஒப்பந்ததாரரிடம் ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் கைது
வால்பாறையில் உரிமம் வழங்குவதற்காக மர ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை வனச்சரகத்தில் வனச்சரக அலுவலராக பணியாற்றி வந்தவர் சக்திகணேஷ். இவர் கடந்த 12-ந் தேதி வரை வால்பாறை வனச்சரகத்தில் பணியாற்றி வந்தார்.
பின்னர், அவர் அட்டகட்டி பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள்காப்பகத்தில் வனத்துறையின் பயிற்சி மையத்திற்கு வனச்சரகராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே வால்பாறையில் அலுவலராக பொறுப்பில் இருந்த போது வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருந்த ஆபத்தான யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டும் பணி அரசின் அனுமதியோடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெட்டப்படும் மரங்களை சமவெளிப் பகுதிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்வதற்கு வனத்துறை சார்பில் வனச்சரக அலுவலர்களிடம் உரிமம் (பர்மிட்) பெற வேண்டும்.
இவ்வாறு மரங்களை வெட்டி லாரிகளில் கொண்டு செல்வதற்கு மர ஒப்பந்ததாரர் உத்திரசாமி என்பவர் அனுமதி பெற்று 10 லோடு மரங்களை கொண்டு சென்றார். மீதியுள்ள மரங்களையும் கொண்டு செல்வதற்கு வனச்சரக அலுவலர் சக்திகணேஷிடம் உரிமம் கேட்டு விண்ணப்பித்தார்.
ஆனால் அதற்கு, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக தர வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் வனச்சரக அலுவலர் சக்திகணேஷ் கேட்டுள்ளார். இது குறித்து ஒப்பந்ததாரர் உத்திரசாமி, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, வனச்சரக அலுவலர் சக்திகணேஷிடம் லஞ்சப்பணத்தை தருவதாக கூறி உத்திரசாமி கூறியுள்ளார்.உடனே அவர், அட்டகட்டி அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை உத்திரசாமியிடம் கொடுத்து திட்டமிட்டபடி நேற்று மதியம் அட்டகட்டி பகுதியில் வைத்து கொடுக்கும்படி செய்தனர்.
அதன்படி, ஒப்பந்ததாரர் உத்திரசாமி சென்று வனச்சரக அலுவலர் சக்தி கணேஷிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சக்தி கணேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது சக்தி கணேசுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story