கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை


கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 19 July 2019 4:30 AM IST (Updated: 19 July 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி,

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சாகர் கவாஜ்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை கன்னியாகுமரி கடலோர பகுதியில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து ரோந்து பணி மேற்கொண்டனர்.

இந்த ஒத்திகையின் போது, போலீசார் மாறுவேடத்தில் கடல் வழியாக படகில் ஊடுருவ முயற்சி செய்வார்கள். அதே போல் வாகனங்கள் மூலம் சோதனை சாவடிகளை கடந்து செல்லவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்.

விசைப்படகில் ரோந்து

இந்த கண்காணிப்பு பணியில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ஒரு குழுவாகவும், சப்-இன்ஸ்பெக்டர் டென்னிஸ் தலைமையிலான போலீசார் இன்னொரு குழுவாகவும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீன்பிடி விசைப்படகில் ரோந்து சென்று கண்காணித்தனர். மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, கடலில் இருந்த மீனவர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர். மேலும், கடலுக்குள் சந்தேகப்படும் வகையில் படகுகள் ஏதாவது செல்கிறதா? எனவும் கேட்டறிந்தனர்.

சோதனை சாவடிகள்

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ஜீப்பில் ரோந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அதுபோல் சின்னமுட்டம், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம், முட்டம், தேங்காப்பட்டணம் உள்பட 11 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. இந்த ஒத்திகை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை நடைபெறும். பாதுகாப்பு ஒத்திகையை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பார்வையிட்டார்.

தாக்குதலை தடுக்க...

சின்னமுட்டம் துறைமுகத்தில் கடல் பாதுகாப்பு ஒத்திகையை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இன்று (அதாவது நேற்று) மற்றும் நாளை(இன்று) ஆகிய 2 நாட்கள் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றால், அவற்றை எவ்வாறு தடுப்பது, கையாளுவது போன்று மாதிரிகளை உருவாக்கி, கண்டறிந்து செயல்படுவது தான் இந்த பாதுகாப்பு நிகழ்வின் நோக்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனை சாவடிகளும், இரண்டு மொபைல் செக் போஸ்ட்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடலோர கிராமங்களில் போலீசார் அங்குள்ள மக்களுக்கு தீவிரவாதிகள் நுழைந்தால் எவ்வாறு தகவல் அளிக்க வேண்டும் என்பன போன்ற பாதுகாப்பு தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story