கோடநாடு வழக்கு விசாரணை, ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
கோடநாடு வழக்கு விசாரணைக்காக ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள்.
ஊட்டி,
கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஷயான், மனோஜ், திபு ஆகிய 3 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அதில் திபு ஜாமீன் வாங்கி விட்டார். ஆனால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஜாமீன்தாரர் சான்றை தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஷயான், மனோஜ், திபு ஆகியோரை கோவை மத்திய சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் பிஜின், சதீசன், சம்சீர் அலி உள்பட 7 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அரசு தரப்பு வக்கீல் நந்தகுமார் ஆஜராகி வாதாடினார். அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உரிய ஆதாரம், முகாந்திரம் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கை பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருக்கிறார். வழக்கு விசாரணையை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே வழக்கை காலதாமதம் செய்யும் வகையில் 10 பேர் தரப்பில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது மோசமான உள்நோக்கம் கொண்டது. ஷயான் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முக்கிய விவரங்களை தெரிவித்து உள்ளார். அந்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் உள்ளது. எனவே அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று நீதிபதியிடம் அரசு வக்கீல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாவட்ட நீதிபதி வடமலை வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து ஷயான், மனோஜ், திபு ஆகிய 3 பேரை கோவை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story