கோத்தகிரி கடைவீதியில், பஞ்சு குடோனில் தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
கோத்தகிரி கடைவீதியில் உள்ள பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
கோத்தகிரி,
கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் அருகில் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இதன் ஒரு அறையில் பஞ்சு மூட்டைகளும், மற்றொரு அறையில் காப்பி கொட்டை மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த குடோனின் மேற்பார்வையாளராக டெய்சி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வழக்கம்போல் குடோனை பூட்டிவிட்டு, தனது வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 6 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால், தீயணைப்பு வாகனத்தை குடோனுக்கு அருகில் கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு தீயணைப்பு வாகனம் குடோனுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் பஞ்சு மூட்டைகள் இருந்த அறை என்பதால், தீ மள மளவென பரவியது.
மேலும் குடோனின் மேற்கூரையில் மரத்தால் ஆன பரண்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் மேற்கூரையிலும் தீ பரவியது. அதிகளவில் புகை வெளியேறியதால், தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் தீப்பிடிக்காத பஞ்சு மூட்டைகளை குடோனில் இருந்து வீரர்கள் வெளியே எடுத்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில் மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களில் இருந்தும் தண்ணீரை பீய்ச்சியடித்து, சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. குடியிருப்புகள் நிறைந்த கடைவீதியில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story